அரியலூர் : அரியலூர் அருகே சுரங்கங்களுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்ற வந்த லாரிகளை மக்கள் விடிய விடிய சிறைபிடித்தனர். அரியலூர் மாவட்டம் பொய்யூர்,சுண்டக்குடி சாலையில் உள்ளது இடையத்தாங்குடி. இப்பகுதியில் தனியார் சிமென்ட் ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் உள்ளன. இவற்றில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் சிமென்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கல் ஏற்றி செல்கின்றன.
இந்த சுரங்கங்களில் இரவில் லாரி இயக்கப்படுவதால் சாலை சேதமாவதுடன், வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுவதாக குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென அவ்வூர் மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களுக்கு சென்ற லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் சாலையின் இரு பக்கங்களிலும் 50க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையில் அணி வகுத்து நின்றன.
தகவலறிந்த கீழப்பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் லாரிகள் செல்வதாலும், அதிக எடையுடன் லாரிகள் செல்வதாலும் சாலை பழுதாகிறது. அதிக பாரம் காரணமாக சுண்ணாம்பு கல் சாலையில் விழுந்து டூவீலரில் செல்பவர்களுக்கு விபத்தை ஏற்படுத்துகிறது. புழுதி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இரவில் சுரங்கங்களில் லாரிகளை இயக்கக்கூடாது. அதிக பாரம் ஏற்றி செல்லக்கூடாது என்றனர்.
அதிகாரிகள் தரப்பில், அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். ஆனால் போராட்டத்தை மக்கள் கைவிடவில்லை. அரியலூர் தாசில்தார் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அதிக எடை ஏற்றி செல்லப்படாது. ஒரு மாத கால அவகாசம் அளித்து அதன்பின் இரவில் லாரிகள் இயக்கப்படாது என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. அதன்பின் விடிந்த பிறகு லாரிகள் இயங்க தொடங்கின.
Nandri : www.dinakaran.com