மறக்கக் கூடாத குலதெய்வ வழிபாடு!
இப்போதெல்லாம், முன்பு போலில்லை. சனப்பெருக்கம், வேலைவாய்ப்பு என்று கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி படையெடுப்பது அதிகரித்துவருகிறது. அப்படி வந்து இங்கேயே தங்கிவிடும்போது,அடுத்த இரு தலைமுறைகளில் யார் குலதெய்வம் என்றே நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது.
அதுசரி, யார் இந்த குலதெய்வம்? அப்படி அதை வணங்கியே ஆகவேண்டிய கட்டாயம் என்ன?
உங்கள் பூர்வீகக் கிராமத்தில், உங்கள் பாட்டன், முப்பாட்டன் முதற்கொண்டு பரம்பரை பரம்பரையாக யாரை வழிபட்டுவந்தார்களோ அதுவே உங்கள் குலதெய்வம். அது ஈசனோ அம்மனோ முருகனோ பிள்ளையாரோ, அல்லது வேறு ஏதும் கிராமதேவதைகளாகவோ கூட இருக்கலாம்.
வியர்க்க விறுவிறுக்க தரிசனவரிசையில் காத்திருந்து நீங்கள் தரிசித்த ஒரு பிரபலமான ஆலயத்தில் கிடைக்காத நிம்மதியும் மகிழ்ச்சியும், நகரிலிருந்து விலகி கிராமியச்சூழலில், அமைதியாக அமைந்திருக்கும் ஒரு அழகான கோயிலில் உங்களை முழுமையாக ஆட்கொள்ளலாம். அனுபவித்திருக்கிறீர்களா?
உண்மையும் அதுதான்! இன்றைக்கெல்லாம் பணப்பேய் ஆட்சிபுரியும் பல பிரபலமான கோயில்களில் இறைசான்னித்தியமே இல்லாமல் போய்விட்டது. ஆனால், எங்கோ ஏரிக்கரையில், வயல்வெளிக்கு நடுவில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்திருக்கும் உங்கள் குலதெய்வக் கோயிலில், அந்த சான்னித்தியமும் திருவருளும் என்றுமே வற்றாது வாரி இறைந்துகொண்டே இருக்கும்.
அது ஒருவகையான முன்னோர் வழிபாடு. உங்கள் குலதெய்வத்தின் கதையை கேட்டுப்பாருங்கள். பெரும்பாலான குலதெய்வங்கள், உங்கள் குடும்பத்திற்காக, உங்கள் சமூகத்திற்காக, உங்கள் கிராமத்திற்காக தன்னையே தியாகம் செய்த மூதாதையர்கள் தான்!
மனிதனாய் வாழ்ந்து தெய்வமாகிவிட்ட அவற்றின் பரம்பரைத் தொடர்ச்சி தான் உங்களின் டி.என்.ஏ இலும் ஜீனிலும் எங்கோ ஒளிந்திருக்கும். எனவே குலதெய்வம், உங்கள் மீது முழு உரிமை எடுத்து வஞ்சகமேயில்லாமல் வாரிவழங்கி அருள்புரியும். தாத்தா - பாட்டிமாருக்கு பேரக்குழந்தைகள் மீதுள்ள மாறாத பாசம் போல!
நம் சமயம் இறைவனை நாடுவதைத்தான் பேரின்பம் என்று போதிக்கிறது. நாமோ காசு, பணம், துட்டு, மணி என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்படி ஓடும் நமக்கு, நம்மைவிட வேகமாக ஓடோடி வந்து அருள்வன தான் குலதெய்வங்கள். ஏனென்றால், உலகியல் ஆசைகளை நிறைவேற்றும் கடப்பாடு உடையன தான் குலதெய்வங்களே .
புதிது புதிதாக வீதியோரங்களில் முளைக்கும் ஆலயங்களையும், தாமே கடவுள் என்று கூறும் ஆன்மிக வியாபாரிகளையும் நாடி மனக்குறைகளைக் கொட்டுவதில் இன்று நாம் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறோம். ஒருதடவை சொந்த ஊருக்குப் போய், குலதெய்வத்திற்கு பொங்கல்வைத்துப் படையலிட்டு வந்து பாருங்கள்! நிச்சயம் உங்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
Nandri : https://www.facebook.com/gowriisankar.s?fref=photo