மூப்பனார் செய்த உதவி ! - தெற்கே உதித்த சூரியன் 6- ராவ்
எங்கும் பசுமையும் நிழல் மரமாகவும் இருந்த கபிஸ்தலம் கிராமத்தில் , பெரிய பிரமுகராக விளங்கிய மூப்பனார் இல்லம் , அறுவடை கால சுறு சுறுப்புடன் இருந்தது. ( இன்றைய ஜி.கே.மூப்பனாரின் முன்னோர்)
அந்த இடத்தின் முன் குதிரையில் அமர்ந்தவாறு வந்தார் ஒரு பெரியவர். " மூப்பனார் இருக்கிறாரா? " என்று அவர் கேட்பது காதில் விழுந்து , விரைந்து வந்தார் மூப்பனார்.
பணிவுடன் வணங்கி அந்த பெரியவரை வரவேற்றார் மூப்பனார். அந்த பெரியவரை அவருக்கு தெரியும் . கணபதி சாஸ்திரிகள் அல்லவா அவர்! காமகோடி பீடத்துடன் நெருக்கமானவர் . மடத்தின் காரியங்களை கவனத்துடன் கவனிக்கும் பெரியவர்.
கணபதி சாஸ்திரிகளை உள்ளே அழைத்து உபசரித்தார் . வந்த காரணத்தை கூறினார் சாஸ்திரிகள்.
பதினெட்டாவது நூற்றாண்டில் நடைபெற்ற கலவரங்களால் , ஸ்ரீமடம் காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணத்திற்கு மாறியது . அதனால் பல மன்னர்களால் மானியமாக ஸ்ரீமடத்துக்கு தரப்பட்ட கிராமங்கள் மடத்தின் நிர்வாகத்திலிருந்து போய்விட்டன. சர்க்கார் அளித்த மோகினி தொகையைக் கொண்டே ஸ்ரீமடத்தின் நிர்வாகம் நடந்தது. அது போதுமானதாக இல்லை.
மடத்துக்கு சொந்தமாக நிலம் வாங்கி வருவாய் பெருக்க வேண்டும் என்பது கணபதி சாஸ்திரிகளின் கனவு .
அது 1850 . அன்றைய காஞ்சி சங்கரச்சாரியாருக்கு , தஞ்சையைக் கடைசியாக ஆட்சி செய்த மராட்டிய மன்னன் , கனகாபிஷேகம் செய்தார் . ஐயாயிரம் தங்க நாணயங்களால் அபிஷேகம் !
கணபதி சாஸ்திரிகள் அந்த நாணயங்களை பத்திரப்படுத்தினார். சங்கராச்சாரியாருக்கு தங்கநாணயங்களை வைத்திருப்பது பிடிக்கவில்லை . கையோடு வித்வான்களுக்கு வழங்கிட நினைத்தார்.
சாஸ்திரிகள் அதைக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு நிலம் வாங்க நினைத்து , மூப்பனாரை சந்திக்க வந்திருந்தார்.
சாஸ்திரியாரின் விசுவாசம் கண்டு மனம் நெகிழ்ந்தார் மூப்பனார். அணக்குடி என்று பக்கத்தில் ஒரு கிராமம் . அங்குள்ள மிராசுதார் ஒருவர் நிலம் விற்க முடிவு செய்திருக்கிறார்.
மூப்பனார் தனது உதவியாளர் ஒருவரை துணைக்கு அனுப்பி சாஸ்திரியாரையும் அந்த மிராசுதாரையும் சந்திக்க செய்தார்.
கருப்பூர் என்னும் கிராமத்தில் 40 வேலி நிலம் அந்த சமயத்தில் தான் வாங்கப்பட்டது. மடத்துக்கு அதிக வருமானத்துக்கு வழி செய்த திருப்தி அடைந்தார் கணபதி சாஸ்திரிகள்.
இரவும் பகலும் மடத்துக்கு உழைத்த கணபதி சாஸ்திரிகள் யார் என்று கேட்க தோன்றும் .
நமது பரமாச்சாரியாரின் தந்தை வழிப்பாட்டானார் இவர்!
கணபதி சாஸ்திரிகள் வேத மேதை . மாபெரும் ஞானி . சுமார் 50 ஆண்டுகள் காமகோடி மடத்தில் பெரும் பதவியை வகித்தார்.
கணபதி சாஸ்திரிகளுக்கு மூன்று மகன்கள்.
மூத்தவர் சுப்பிரமணிய சாஸ்திரிகள். இவரே நமது சுவாமிகளின் தந்தையாவார்.
நமது சுவாமிகளை உலகுக்கு அளித்த மகாலட்சுமி -----
மகாலட்சுமி என்பதே தாயாரின் பெயர் !
தஞ்சையில் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதரின் வம்சத்தவர் இந்த அம்மையார். கோவிந்த தீட்சிதர் மகாவித்வானாக , புகழ் பெற்றிருந்தவர். ' ஐயன் ' என்று தஞ்சை மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். ஐயன் குளம் , ஐயன் கடை , ஐயன் வாய்க்கால் என்று இவர் பெயர் தஞ்சைப்பகுதியில் பல இடங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது .
தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையில் உள்ள ஊர்களில் இருகரைகளிலும் கருங்கல் படிக்கட்டுகளை அமைத்தவர் இவர்.
கும்பகோணத்தை அடுத்த பட்டீசுவரம் கோயிலில் இவருடைய உருவச்சிலையைப் பார்க்கலாம்.
இப்படிப்பட்ட மகா உன்னதமான குடும்பத்தில் தான் சூரிய உதயம் நிகழ்ந்தது.
NANDRI : http://www.andhimazhai.com/news/viewmore.php?id=5734