கும்பகோணம்: ""சாகும் வரை மக்களுடன் இருக்க ஆசைப்படுகிறேன். ஆகையால், என்னை வற்புறுத்தாதீர்கள் என்று கூறி, பிரதமர் பதவியை நிராகரித்தவர்,'' என, மூப்பனாருக்கு மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார்.
கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் எதிரில், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனா ரின் முழு உருவ வெண்கலச்சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. மூப்பனாரின் முழுஉருவ வெண்கலச் சிலையை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 12.15 மணிக்கு திறந்து வைத்து பேசியதாவது: எனக்கும், மூப்பனாருக்கும் 40 ஆண்டுகால நட்பு உண்டு. பல்வேறு நேரங்களில் கட்சிப்பணியில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் காந்தியடிகளின் வாழ்க்கை நெறிகளை அப்படியே பின்பற்றிய அபூர்வ அரசியல்வாதி. எப்போதும் எளிமையாகக் காட்சியளிப்பவர்.
மூப்பனார் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வாழ்க்கை முறையில் காமராஜரை பின்பற்றி எளிமையாக வாழ்ந்தவர். ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கு தன் வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் மூப்பனார். சிறந்த லோக்சபாவாதியான அவர் கட்சிப்பணியில் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய எளிமை, எதையும் எளிதில் கையாளும் திறன் ஆகியவற்றைக் கண்டு தான், காங்கிரஸ் மேலிடம் பல மாநிலங்களில் நடந்த பிரச்னையை தீர்க்க மூப்பனாரை அனுப்பியது. அவரும் எந்த பிரச்னையாக இருந்தாலும் சிறப்பாக கையாண்டு தீர்வு கண்டவர்.
கடந்த 1978ல் காங்கிரஸ் கட்சி பிரிந்தபோது, மூப்பனார் தன் ஆதரவாளர்களுடன், இந்திராகாந்தியின் தலைமை ஏற்று காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்த, டில்லி அக்பர்ரோடு அலுவலகத்துக்கு சோதனை வந்தபோது, தானே அந்த பங்களாவை அரசிடம் வாங்கி கட்சி அலுவலகம் நடத்த தந்து உதவினார். அதன்பின், ஒரு அறை கொண்ட வீட்டிலேயே அவர் டில்லியில் வசித்தார். அந்த வீட்டில் தான் இப்போதும் அவருடைய மகனும், மத்திய அமைச்சருமான வாசன் இருக்கிறார். தன்னுடன் இருப்பவர்களை அரவணைத்து வழிநடத்தி செல்லும் திறன் படைத்தவர் மூப்பனார். 1996-99ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தபோது, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. அப்போது யாரை பிரதமராக தேர்வு செய்வது என்று ஆலோசித்ததில், வி.பி.சிங் பெயரும், ஜோதிபாசு பெயரும் பரிசீலிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் ஏற்கமுடியாத சூழ்நிலையில் மூப்பனாரை பிரதமராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அந்த செய்தியை அவரிடம் நான் தான் கொண்டு சென்றேன். அப்போது அவர், "சாகும் வரை மக்களுடன் இருக்க ஆசைப்படுகிறேன். ஆகையால், என்னை வற்புறுத்தாதீர்கள்' என்று கூறி பிரதமர் பதவியை நிராகரித்தவர். வரலாற்றில் காந்திக்குப் பிறகு பதவியை, அதிகாரத்தை வெறுத்தவர்கள் காமராஜர், மூப்பனார், சோனியா. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்