ஒரு நதியின் கதை
"சோழ வளநாடு சோறுடைத்து' என்பார்கள். எங்கெங்கு காணினும் பச்சைப் பசேலென்ற வயல் பரப்பு. மரச்சோலைகளில் பச்சைக்கிளிகளும் குயில்களும் கிறீச்சிட்டும் கூவியும் இன்னோசை எழுப்புகின்றன. சலசலத்து ஓடும் காவிரி. அதன் இருபுறமும் பசுமையான மரங்கள்! சற்றே சில அடி தூரத்திலேயே அரசலாறு, திருமலைராஜன் ஆறு, குடமுருட்டி ஆறு என ஆறுகள் அடுத்தடுத்துப் பிரவாகமெடுத்தோடும் கபிஸ்தலம்தான், 1931ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி ஒரு 'தேசிய நதி'யைப் பிரசவித்தது. அந்த நதியைத் தோற்றுவித்தவர்கள் கோவிந்தசாமி மூப்பனாரும் சரஸ்வதி அம்மாளும்தான் என்ற போதிலும்கூட, அந்த நதிக்கு ஒரு நீண்ட பின்னணிகொண்ட மூலவரலாறு உண்டு!
கடந்த ஐந்து தலைமுறைகளாகக் கபிஸ்தலம், சுந்தரபெருமாள் கோவில், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளை மக்கள் 'மூப்பனார் தேசம்' என்றே அறிவார்களாம். அவ்வளவு பாரம்பரியம் மிக்க வரலாற்றுச் சிறப்பு கொண்டது மூப்பனாரின் குடும்பம்.

ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட சரபோஜி அரசர், தமக்குரிய பரிவாரங்களுடன் வடபுலத்தில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் வலம் வந்துள்ளார். அக்காலத்தில், ஊர் ஊராகச் சுற்றும் 'தேசாந்திரிகள்' என்றழைக்கப்படும் வடநாட்டைச் சேர்ந்த 'பைராகிகள்' காசிக்கு வந்திருந்தனர். அங்கே சரபோஜி மன்னர் தமது பரிவாரங்களுடன் வருவதைக் கண்ட பைராகிகள், மன்னரைச் சுட்டிக்காட்டி 'இவர்தான் மூப்பனார் தேசத்து ராஜாவாம்' எனத் தமக்குள் பேசிக்கொண்டதைக் கேட்ட மன்னர் வியந்து போனாராம். எங்கோ வடநாட்டிலிருக்கும் பைராகிகள், தஞ்சை அரசரைக் கூட, மூப்பனார் மூலமாகத்தான் அடையாளம் கண்டனர் என்கிற அளவுக்குத் தர்ம சிந்தனையும் கொடையுள்ளமும் கொண்டவர்களாக மூப்பனாரின் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர்.

1770ஆம் ஆண்டு எல்லாக்கி முத்தையா மூப்பனார் நிறுவிய 'ஸ்ரீ வெங்கடாசலபதி அன்னச் சத்திரம் டிரஸ்ட்' அன்று தொடங்கி இன்றுவரை தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, குறிப்பாக, ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் தேசாந்திரிகளுக்கும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கும் அன்னதானம் செய்து வருகிறது. அவரது தலைமுறையில் வந்த ராமபத்ர மூப்பனாரும் 'கபிஸ்தலத்து ராஜா' என்றும், 'பெருங்கொடை வள்ளல்' எனவும் பெயர் பெற்றவர்.

அக்காலத்தில், தஞ்சை மண்டலத்திலிருந்த எண்ணற்ற சங்கீத வித்வான்களையும் புலவர்களையும் கலைஞர்களையும் அவர் போற்றிப் போஷித்து வந்தார். 'தமிழ்த் தாத்தா' என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர், ராமபத்ர மூப்பனாரின் சிறப்புகள் குறித்துத் தமது பல்வேறு புத்தகங்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். அவருக்குப் பின்வந்தவர்களான ரெங்கசாமி மூப்பனார், கோவிந்தசாமி மூப்பனார் போன்றோரும் தமது முன்னோர்களின் அடியொற்றியே சிறப்புற வாழ்ந்தனர்.
ரெங்கசாமி மூப்பனார் – செல்லதம்மாள் ஆகியோருக்குப் புதல்வராகப் பிறந்தவர் கோவிந்தசாமி மூப்பனார்.
கோவிந்தசாமி மூப்பனார் – சரஸ்வதியம்மாள் ஆகியோருக்கு மூத்த புதல்வராகப் பிறந்தவர் கருப்பையா மூப்பனார்.

மூப்பனாரின் உடன்பிறந்தோர் 6 பேர். மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். ராமாநுஜத்தம்மாள், ரெங்கசாமி, சாந்தா, சுலோச்சனா, சம்பத், சந்துரு.

ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேர் விட்ட பெரிய குடும்பம்! ஒவ்வொருவருக்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று விரிந்தபோதிலும், பிரிந்துபோகாத கூட்டுக் குடும்பம்! அன்பு, மகிழ்ச்சி, கட்டுப்பாடு, பெரியோர்களுக்கு மரியாதை, செல்வத்திலும் பணிவு போன்ற நற்குணங்கள் அமையப் பெற்றுள்ளனர்.
கருப்பையா மூப்பனாரின் தந்தை கோவிந்தசாமி மூப்பனார் (ஆர்.ஜி.எம்) நல்ல பரோபகாரி! ஆனாலும் கண்டிப்பானவர்.

ஜி.கே.எம்.மின் இளவல் ஜி.ரெங்கசாமி மூப்பனார் கூறும்போது, "அப்பாவிடம் எங்கள் எல்லாருக்குமே ரொம்ப பயபக்தி இருந்தது. அவர் முன்னாடி நின்று பேசவே பயப்படுவோம். நாங்கள் ஒழுக்கமாக வளரவேண்டும் என்பதற்காகக் கறாராக இருப்பார். அனாவசியமாக ஊர்சுற்ற அனுமதிக்க மாட்டார். அதனால் அண்ணன் (ஜி.கே.எம்.) தமது நண்பனும் அத்தை மகனுமான சிவராஜ் மூப்பனாரோடு வீட்டிலேயே விளையாடுவார். மற்ற சில நண்பர்களும் வீட்டிற்கு வருவார்கள். சடுகுடு, ஃபுட்பால், பாட்மிட்டன் போன்ற விளையாட்டுகளை அபாரமாக விளையாடுவார். சைக்கிள் ஓட்டுவதில் சூரப்புலி! வீட்டு மாடிப்படிகளில் தடதடவெனச் சைக்கிளில் கீழே இறங்குவதைப் பார்ப்பதற்கே திகிலாக இருக்கும். குதிரைச் சவாரி செய்வதில் அலாதிப் பிரியம் அவருக்கு! அதுவே அவருக்குக் கால் ஒடிந்து, படிப்பு கெடும் நிலைக்குச் சென்றது. அதனால் ஆறாவது பாரம் வரையிலும்தான் படித்தார்.

இளம் பிராயத்தில், கும்பகோணத்தில் சாரணர் படையில் துடிப்புமிக்க தலைவராகவும் இருந்துள்ளார். காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது எதிர்நீச்சல் போடுவார். பாபநாசத்திலுள்ள விக்டோரியா போர்டு ஹைஸ் ஸ்கூலில்தான் படித்தார். தமிழில் நல்ல ஈடுபாடு உண்டு. ஆங்கிலத்திலும் அப்போதே சரளமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். கணக்கில் மட்டும்தான் கொஞ்சம் கஷ்டப்படுவார். (கணக்கின்றி அள்ளித் தரும் பரம்பரைக்குச் சொந்தக்காரர் அல்லவா!) சரஸ்வதி மஹால் லைப்ரரிக்குச் சென்று நிறைய படிப்பார். கல்கி, தேவன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்றவர்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பார். அந்தக் கதைகளில் வரும் நல்ல கேரக்டர்களைப் பற்றி சில நேரங்களில் சிலாகித்துச் சொல்லுவார்'' என்கிறார் ஜி.கே.எம்.மின் இளவல் ஜி.ரெங்கசாமி மூப்பனார் (ஜி.ஆர்.எம்.)

"அண்ணனுக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கம் பற்றிச் சொல்லுங்களேன்?''
அண்ணனைப் பற்றிக் கேட்டவுடன் பேச ஆரம்பித்த ஜி.ஆர்.எம். கண்ணோரங்களில் லேசாக நீர் திரளுகிறது. "அண்ணன்தான் எங்களுக்குச் சகலமும்! அப்பாவிற்குப் பிறகு அப்பாவின்பால் எங்களுக்கிருந்த பயபக்தியும் மரியாதையும் அண்ணன் மீது தான்! அண்ணன் தம் வாழ்க்கையைத் தேசத்திற்காக ஒப்படைத்துவிட்டார். அதனால் அவருக்கு முடிந்தவரை குடும்பச் சுமைகளும் கவலைகளும் இல்லாமல் இருக்கவும், அவர் விரும்பியபடி ஒற்றுமையாக இருக்கவும் நாங்கள் ஆசைப்படுகிறோம்.
1955இல் அப்பா இறந்ததிலிருந்து இந்தக் குடும்பத்தின் முழுபாரத்தையும் இளம் வயதிலேயே தோளில் சுமந்தவர் அண்ணன். அண்ணன் சொன்னாரென்றால் அதற்கு மறுபேச்சு நாங்கள் பேசுவதில்லை. "டேக் இட் ஈஸி பாலிசி" அண்ணனுடையது. பெருந்தன்மையோடு அனைவரையும் அரவணைத்துச் செல்லுவார். எந்தச் சூழ்நிலையிலும் அவர் பதற்றமடைவதையோ, கலங்கி நின்றதையோ நாங்கள் கண்டதில்லை. வீட்டு நிர்வாகம், நிலபுலன்களைக் கவனிக்கும் நிர்வாகம், கட்சி நிர்வாகம் போன்ற எதிலுமே மிகச் சிறப்பான நிர்வாகத்திறன் கொண்டவர். இங்கே இளம் பிராயத்திலே அவர் நிர்வகித்த (1956 – 1972 ) சந்திரசேகரபுரம் கூட்டுறவுப் பண்டகசாலை இந்தியாவிலேயே மிகச் சிறந்த கூட்டுறவு ஸ்தாபனம் என்ற விருதைப் பெற்றது.''

"இவ்வளவு நிர்வாகத்திறன் உள்ள அவர் பெரிய தொழிற்சாலைகள் போன்றவைகளை ஆரம்பித்துச் செல்வத்தைப் பெருக்கியிருக்கலாமே?''
"எவ்வளவோ பேர் இதுபோன்ற யோசனைகளை அவரிடம் சொல்லிப் பார்த்துவிட்டனர். 'செய்யலாம்தான். ஆனால், பிறகு நான் பொதுவாழ்க்கையிலிருந்து விலகி வந்துவிட வேண்டியதுதான்' என்பதுதான் அவரது பதில். பொதுவாழ்க்கையில் தமக்கு இருக்கும் செல்வாக்கைச் சொத்து, செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அவர் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளார்'' என்றார் ஜி.ஆர்.எம்.
ஓர் இயல்பான விவசாயிக்கே உரிய எளிய தோற்றமுள்ளவரான 80 வயது நிரம்பிய மூப்பனாரின் தாய்மாமாவான சருக்கை எஸ். பழனிச்சாமி மூப்பனார் கூறியதாவது, "சின்ன வயதிலேயே துருதுருவென்று 'ஆக்டிவ்'வாக இருப்பார். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தபோது அவருக்குப் பதினாறு வயது. எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது. ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு. நாங்கள் அனைவரும் தூங்காமல் இந்தியா சுதந்திரமடைந்த அறிவிப்பைக் கேட்டு ஆனந்தமாகப் பேசிக்கொண்டிருந்தோம். மூப்பனாரின் அப்பா கோவிந்தசாமி மூப்பனார் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராயிருந்தார். மறுநாள், நாங்கள் மக்கள் அனைவரையும் எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். ஆகஸ்டு 15, கோவிந்தசாமி மூப்பனார் வீட்டு வாசலில் தேசியக்கொடி ஏற்ற, நான் உணர்ச்சிப் பெருக்கோடு பேசி முடிக்கவும் கிராம மக்கள் 500 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.

மூப்பனாரின் கல்யாணத்தைப் பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும். அது, இங்குள்ள மக்களின் கிராமத் திருவிழா போல நடந்தது எனலாம். பந்தக்கால் நட்டதிலிருந்து பார்த்தால் ஒரு மாசம் திருமண விழா நடந்தது. திருமண நாளில் ஒவ்வொரு வேளைக்கும் சுமார் 15,000 ஜனங்கள் உணவு அருந்துவார்கள். பெரிய பெரிய சங்கீத விற்பன்னர்கள், மேதைகளின் கச்சேரிகள் நடந்தது. அன்றைக்குப் பிரபலமாயிருந்த நாட்டியக் கலாமணிகள் லலிதா, பத்மினி நாட்டியமாடினார்கள். ஜூன் 1949ஆம் ஆண்டு, 18 வயதிலேயே அவருக்குத் திருமணம் நடந்தது. அவரது அத்தை மகள் கஸ்தூரியைத்தான் கைப்பிடித்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் கோவிந்தவாசன், உஷாராணி. தந்தையின் அருங்குணங்களை இளம் வயதிலேயே ஒருங்கே பெற்றவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் கோவிந்தவாசன் (ஜி.கே.வாசன்).

தஞ்சைத் தரணியில் உள்ள பலதரப்பட்ட கோவில் திருவிழாக்களில் இந்தக் குடும்பத்தின் கைங்கரியம் எப்போதும் இருந்து வருகிறது. எங்கள் வீட்டிற்குப் பெருந்தலைவர் காமராஜர் பலமுறை வந்துள்ளார். தஞ்சை மாவட்டத்திறகு வரும்போதெல்லாம் இங்குத் தங்கிச் செல்வது பெருந்தலைவரின் வழக்கம். ஒருமுறை தந்தை பெரியார் கூட வந்திருந்தார். 'நீங்க காமராசரைத் தீவிரமாக ஆதரிப்பது குறித்து எனக்குச் சந்தோஷம். இப்படியே இருங்கள்' என மூப்பனாரை வாழ்த்தினார்.

மூப்பனார் ஒரு மென்மையான ஆன்மிக ஆர்வலர். அடிக்கடி திருப்பதி செல்வார். மண்டகப்படி, சுவாமிக்குக் கல்யாணம் செய்விப்பார். யாருக்குமே தெரியாது, பிரசாதம் தரும்போதுதான் தெரியும். ஆன்மிகப் பெரியவர்களைச் சந்திப்பார். ஆதீன மடாதிபதிகளைப் பார்ப்பார். காஞ்சிப் பெரியவரின்மீது மிகுந்த மரியாதை கொண்டவர். தமிழ்நாடு மட்டுமல்ல, கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பரந்துபட்ட நட்புள்ளவர்'' என்கிறார் பழனிச்சாமி மூப்பனார்.

பழம்பெரும் காங்கிரஸ்காரரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான வெங்கடாச்சலம், "காங்கிரஸ் பேரியக்கத்திற்கென எந்த ஒரு காரியத்தைத் தந்தாலும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இயல்பு அவரிடம் இளமையிலேயே இருந்தது. அதிகம் பேசாத, உண்மையான செயல்வீரர் என்றால் அது மூப்பனார்தான்.
1952ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, சுழன்று சுழன்று பணியாற்றினார். கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு மூப்பனாரின்மீது எப்போதும் ஒரு வாஞ்சையுண்டு. கட்சிக்கு அன்றைய தினம் ஒரு செல்லப்பிள்ளைதான் மூப்பனார். ஒருநாள் வாண்டையார் என்னை அழைத்து, 'நீங்கள் கபிஸ்தலம் போய் கருப்பையா தம்பியைப் பார்த்து மெம்பர், தீவிர மெம்பர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினருக்கான விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கி வாருங்கள்' என அனுப்பினார். அதன்படி அவரிடம் கையெழுத்து வாங்கி, 21 ரூபாயும் காலணாவும் பெற்று வந்தேன்.

எல்லாரும் வற்புறுத்திய பின்புதான், 1965இல் தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய காலத்தில்தான் தஞ்சை மாவட்டத்தைக் காங்கிரஸின் வலுவான கோட்டையாக்கிக் காட்டினார். 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியடைந்த நேரத்தில்கூட, தஞ்சை மாவட்டத்தில் பாதிக்குப்பாதி இடங்களில் வெற்றிபெற்று, தி.மு.க.விற்குக் கடுமையான போட்டியைத் தந்தது'' என்று கூறினார்.

82 வயதைக் கடந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கட்டாரம் ஏ.மாரிமுத்து, தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் தலைவராக மூப்பனார் இருந்தபோது துணைத் தலைவராகப் பணியாற்றியவர். அவர் கூறும்போது, "என்னைப் போன்ற சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களும் பொதுவாழ்க்கûயில் பலதரப்பட்ட பதவிகளை வகிக்கக் காரணமாய் இருந்துள்ளார். ஐயா வந்துவிட்டால் எப்போதும் உற்சாகம்தான்! பலதரப்பட்ட பிரச்சினைகள், சவால்கள் வரும்போது, நாங்களெல்லாம் கலங்கி நின்றபோது, அதையெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாக அணுகி, தீர்த்து வைப்பார். ஐப்பசி மாதத்தில் அடைமழை பொழியும் நேரத்தில்கூட கூட்டங்கள் நடத்துவார். தஞ்சை மாவட்டத்தில் – அன்றைய மாவட்டம் என்பது இன்றுள்ள நான்கு மாவட்டங்களை ஒருங்கே கொண்டது. அவற்றில் அவர் கால்படாத கிராமங்களே இல்லை! அந்தக் காலகட்டத்தில், நடந்த பல்வேறு ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சித் தேர்தல்களில் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற அயராது பாடுபட்டவர். ஒருமுறை விவசாயிகள் போராட்டத்திற்கு ஐயாவின் தலைமையில் 19,000 பேர் சிறை சென்றோம்.

பெருந்தலைவருக்கு ஐயாவின்மேல் தனிப் பாசமே உண்டு. ஐயாவை 'அம்பி' என்று செல்லமாகப் பெயரிட்டுப் பெருந்தலைவர் அழைப்பார்.
'ஐயாவின் ஞாபக சக்தி அபாரமானது. குக்கிராமங்களில் உள்ள தொண்டர்களைக் கூடப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுவார். என்னைப் போன்ற ஏழை எளிய, பின்தங்கிய குடும்பத்துக் கட்சிக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தவறாமல் வருவார்'' என்று கூறிமுடித்தார்.

"அந்தக் காலத்திலிருந்தே சிறுபான்மை சமூக மக்களின் இனிய நண்பராக ஐயா இருந்துள்ளார். கட்சிப் பாகுபாடில்லாமல் அன்பு செலுத்துவார். மாற்றுக் கட்சியிலுள்ள சாதாரணத் தொண்டனைக் கூடத் தெரிந்து வைத்திருப்பார். பாபநாசம், அய்யம்பேட்டை, பண்டாரவாடை போன்ற பகுதிகளிலுள்ள இஸ்லாமிய மக்கள் எப்போதுமே ஐயாமீது அபாரமான அன்பு கொண்டவர்கள். இஸ்லாமிய மக்களின் பல குடும்ப நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

"பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் காலத்தில், சொல்வது அவராக இருந்தபோதிலும் அதைச் செய்து முடிக்கும் செயல்வீரராக ஐயா விளங்கினார். ஒரு தொண்டனுக்குரிய அனைத்து இலக்கணங்களோடும் அந்தக் காலத்தில் அவர் பணியாற்றியதை அருகிலிருந்து நாங்கள் பார்த்துள்ளோம்'' என்கிறார் வலங்கைமான ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் எம்.பக்கீர் முகமது. அவருக்கு இப்போது வயது 83.
"அந்தக் காலத்தில், கும்பகோணத்தில் 'மூப்பனார் பங்களா' என்பது அறிவுத் தாகம் கொண்டோரின் கலாசாலையாக இருந்தது எனலாம். 'லிபரேட்டர்' இதழின் பிரதான செய்தியாளர் சௌகத் அலி போன்றோரெல்லாம் ஐயாவிடம் பேசிக் கொண்டிருப்பதை நாங்கள் கேட்டுப் பயனடைவோம். கட்சிக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் அவருக்குப் பல தரப்பிலும் உண்டு'' என்றார் மூப்பனாரின் குடும்ப வழக்குரைஞரான 70 வயது நிரம்பிய எம். தாஜதீன்.

மேலும், அவர், "அந்தக் காலத்தில் பல பிராமண வக்கீல்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். எங்கள் இஸ்லாமிய சமூகத்தவர்களே ஒரு கேஸ் என்றால் அவர்களிடம்தான் செல்வார்கள். ஒரு முஸ்லிமாகிய என்னைத் தமது குடும்ப வழக்குரைஞராக ஐயா ஏற்றுக் கொண்டார். என்மீது முழுமையான, பரிபூரணமான நம்பிக்கை வைத்து, எல்லா விஷயங்களையும் என்னிடம் ஒப்படைப்பார்.

இப்போது நினைத்தாலும் என் நெஞ்சம் நெகிழ்கிறது. ஒருமுறை டெல்லியில் நெஜ்மா ஹெப்துல்லாவிடம் என்னை அறிமுகப்படுத்தி, 'இவர் என் ஃபேமிலி அட்வகேட். இவர் எங்கே கையெழுத்திடச் சொன்னாலும் நான் போடுவேன்' என்றார். அந்த அளவுக்கு அவர் குடும்பத்தில் ஒருவராக என்னையும் எண்ணும் அவரது இயல்புக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும்கூட அவரும், அவரது குடும்பத்தாரும் அடிக்கடி வந்து நலம் விசாரித்துச் செல்லும் பண்பு கொண்டவர்கள்'' என்றார்.
பெருஞ்செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தோற்றத்தில் எளிமையானவர். நகைகள் அணியவும் ஆடம்பர உடை உடுத்தவும் இயல்பாகவே மூப்பனாருக்கு நாட்டமில்லை.
கடல் கடந்த நண்பர்கள் கணக்கின்றி அவருக்கு உண்டென்ற போதிலும், 'பாஸ்போர்ட்' கூட அவர் எடுத்துக்கொண்டதில்லை.

ஆழ்ந்த தேசிய உணர்வும் பொதுவாழ்வில் தூய்மையும் எளிமையும் கனிவும் நிரம்பிய ஓர் அபூர்வ மனிதராக மூப்பனார் விளங்கி வந்திருக்கிறார்.
காவிரிக் கரையில் உள்ள கபிஸ்தலத்தில் பிறந்த ஒரு நதி, கங்கை நதிப் புறத்தில் பிரவாகமெடுத்து ஓடி, இந்திய அரசியல் வரலாற்றில் காலத்தால் அழியாத சாதனைகளைப் படைத்து வந்திருக்கிறது.
(ஆ.கோபண்ணா தொகுத்த 'மக்கள் தலைவர் மூப்பனார்' நூலில்......

1 comments:

  • முதன் முறை தங்கள் பதிவுகளை பார்க்கிறேன். மூப்பனார் பற்றி நல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி. இன்று முதல் தங்களை Follow செய்பவர்கள் பட்டியலில் நான் இணைவதில் மகிழ்ச்சி! நான் எழுதிக்கிழிக்கும் இடங்கள் madrasbhavan.blogspot.com & nanbendaa.blogspot.com. நேரம் இருந்தால் எட்டிப்பார்க்க. பிடிக்காவிட்டால் திட்டித்தீர்க்க.

கருத்துரையிடுக

வரும் தேர்தலில் உங்களுடைய ஓட்டு இந்த கூட்டணிக்கு?

Our Google

Your browser does not support iframes.

மொத்தப் பக்கக்காட்சிகள்

Visitors

free counters

Menu

Menu By (C)Moopanar.com

Parkavan Murasu

Parkavan Murasu
Magazine for Moopanar

நன்றி (Thank you)

எங்கள் வலைப்பதிவை தாங்கள் பார்வையிட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களுடைய கருத்துகளையும் வலைபதிவில் செய்யவேண்டிய மாற்றங்களையும் மறக்காமல் எங்களுக்கு தெரியபடுத்துங்கள். நன்றி. Thank you very much for your visit to our blog. Kindly write your valuable comments and advice to imporve the blog. Thank you. E-mail : moopanar.community@gmail.com

Chat with us

Protect

myfreecopyright.com registered & protected

பார்வையிட்டவர்கள்

வந்து சென்ற உறவுகள்

மூப்பனார் (பார்க்கவகுலம்)

Our Twitter

Our Google Group

Google Groups
Subscribe to Parkavakulam Moopanar (பார்க்கவகுல மூப்பனார்) Community
Email:
Visit this group

Our Yahoo Group

Subscribe to moopanar_community

Powered by in.groups.yahoo.com