தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு அரசாண்டு வந்த மராட்டிய மன்னர் சரபோஜி, தன் படை பரிவாரங்களுடன் காசிக்கு யாத்திரையாகச் சென்றார். "இத்தனை அற்புதமாக யாத்திரை வந்திருக்கும் இவர் எந்தத் தேசத்து அரசர்?' என்று காசி மாநகர மக்கள் வியந்து கேட்டனர். அதற்கு, "இவர்தான் தஞ்சையை ஆண்டு வரும் மன்னர் சரபோஜி மகாராஜா' என்றுகூட வந்தவர்கள் கூறினர். வடநாட்டிலுள்ள அந்த மக்களுக்கு "தஞ்சை' என்றதும் புரியவில்லை. "அது எங்கிருக்கிறது?' என்று வினவினர். அரசரின் கூட வந்தவர்கள், தஞ்சை பெரிய கோயிலையும் காவிரிக் கரையையும் அடையாளம் சொல்லி தஞ்சையை புரிய வைக்க முயன்றனர். காவிரிக் கரை என்றதுமே காசி மக்கள், "அட இவர் மூப்பனார் தேசத்து ராஜாவா? இதை முன்னமே சொல்ல வேண்டியதுதானே!' என்று கூறியதாக ஒரு கர்ண பரம்பரைக் கதையுண்டு.
அப்படி "மூப்பனார் தேசம்' என்று அழைக்கப்பட்ட தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் முதல் கிராமமாக அமைந்துள்ளது வீரமாங்குடி. இங்குள்ள சில அற்புத ஆலயங்களை பற்றித்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.
தல அமைவிடம்
தஞ்சையிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், ஐயாறப்பர் ஆலயம் அமைந்து உள்ள திருவையாற்றில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் வீரமாங்குடி கிராமம் அமைந்துள்ளது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாமல் ஒரு காலத்தில் பாய்ந்த காவிரியின் வடக்கிலும், கொள்ளிடம் ஆற்றின் தெற்கிலும் இடைப்பட்டு நிற்கிறது, இந்த எழிலார்ந்த கிராமம்.
பொய்யாய்ப் பழங்கதையாய்...
வீரமாங்குடி கிராமத்திலே இந்து சமயத்தின் உட்பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட அறுவகைத் தெய்வங்களுக்கும் தனித்தனியே ஆலயங்கள் உண்டு. அதற்குரிய விழாக்களும் ஒரு காலத்தில் தவறாமல் நடந்து வந்தது. செல்லியம்மன் ஆலயத் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்று வந்தன. தேரோடும் வீதியெங்கும் மக்கள் திரண்டு சாமி கும்பிட்டு வந்தார்கள். "ஊருணி பொங்கல்' என்றும் "ஒப்பில்லாப் படையல்' என்றும் செல்லியம்மனுக்குப் படைத்தனர். இன்று தேரும் இல்லை, திருவிழாவும் இல்லை என்றாகிவிட்டது. காவல் தெய்வம் கருப்பண்ண சாமிக்கும் பொங்கலிட்டு ஆடி மாதத்திலே அற்புத திருவிழா நடத்தினர். அதுவும் இப்போது நின்று போய் இப்போதோ எப்போதோ என்று ஆகிவிட்டது.
இவ்வூரிலுள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா, சுற்றுவட்டார கிராமங்களில் வெகு பிரசித்தம். திருவிழா ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே கோயில் பூசாரியார் தன் குழுவினருடன் மகாபாரதக் கதையை பாட ஆரம்பித்துவிடுவாராம். பம்பை, உடுக்கை முழங்க அவர் கதை சொல்லும் பாணி அலாதியாக இருக்குமாம். ""கதை துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே பம்பை ஒலிக்கத் துவங்கிவிடும்; அதன் கம்பீரமான ஒலி கிராமம் முழுவதும் கேட்கும். கிராமத்தினர் இரவு உணவை முடித்துக் கொண்டு கதை கேட்கச் சென்றுவிடுவர். திருவிழா நெருங்க இருக்கும் நாட்களில் மதிய நேரத்திலும் மகாபாரதக் கதை நடைபெறும். இதை உறுமக் (மதியம்) கதை என்று கூறுவோம். இந்த மதியக் கதை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு சென்று விடுவோம். பாடத்தை விட பாரதம் அவ்வளவு இனிமையாக இருக்கும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கீழவீதியை மையமாக கொண்டு இருக்கும். தெற்கு வீதியில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் "பக்த ருக்மாங்கதா' நாடகம் நடக்கும். மெலட்டூர், சாலியமங்கலம் பாகவதமேளா நாட்டிய பாணியில் நடந்த இந்த நாடகத்தைக் காண ஏராளமான கூட்டம் வரும். 75 ஆண்டுகள் தொடர்ந்து இந்த நாடகம் நடந்தது. ருக்மாங்கதனாக நடித்த கருப்பையா மூப்பனாரும் மோகினியாக நடித்த துரையப்ப மூப்பனாரும் மறைந்து போக இந்த நாடகமும் நின்று போனது'' என்று இன்றும் இங்குள்ள பெரியவர்கள் அன்றைய வசந்த காலத்தை அசை போடுகின்றனர்.
""மேல வீதியிலே ஐந்து நாட்களுக்கு ராம நாடகமும் லவாகுசா நாடகமும் நடந்து அமர்க்களப்படும். வடக்கு வீதியிலே சித்திரை மாதத்திலே சிறு தொண்டர் நாடகம், மூன்று நாட்களுக்கு நடக்கும். இதற்குப் போட்டியாக கீழ வீதியிலே அரிச்சந்திரா நாடகம் நடக்கும். எல்லாவற்றிலும் போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது. ஒருவர் செய்ததைவிட மற்றொருவர் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவர்'' என்று முதியோர்கள் மூச்செறிகின்றனர்.
தீமிதியும், திருவிழாவுமாகத் திகழ்ந்த திரௌபதி அம்மன் ஆலயம், கிராமவாசிகளால் புதுப்பிக்கப்பட்டு நல்ல நிலைமையில் உள்ளது. விநாயகர், செல்லியம்மன் ஆலயங்கள், நல்ல உள்ளம் கொண்ட உபயதாரர்களால் திருப்பணி செய்யப்பட்டு வருகிறது. ஐயனார், மாரியம்மன் ஆலயங்கள் அறநிலையத்துறையின் நிதி உதவி பெற்று வேகமாகத் திருப்பணி காண்கின்றன. "வஜ்ஜிர கண்டீஸ்வரர்' எனும் சிவன் கோயிலுக்கும் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கப் பெற்றுள்ளது. வேண்டுவோர் வேண்டுவதை அருளும் பேரருளான சிவபெருமான், விரைவிலேயே புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தில் பொலிவுடன் வீற்றிருப்பார் என்பதில் ஐயம் இல்லை. இப்படி இக்கிராமத்தில் ஐந்து திருக்கோயில்களும் ஒரே நேரத்தில் புதுப்பிக்கப் பெற்று திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் செய்தி, ஆன்மீக அன்பர்களை மகிழ்விக்கும்.
கிராமப்புற தெய்வங்களான மாரியம்மனும் ஐயனாரும் இந்தத் திருப்பணிகளின் மூலம் மீண்டும் பவனி வர இருக்கிறார்கள். இத்திருப்பணி வேலைகள் நிறைவுக்குப் பிறகு பாரம்பரியக் கலைகளையும் மீண்டும் நிகழ்த்திடத் திட்டம் உள்ளது. இத்தனை நிறைவான நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு சிறிய குறை இருக்கத்தான் செய்கிறது. இக்கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலை புதுப்பிக்க மட்டும் நிதி உதவி எதுவும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஒரு வரலாறு நினைவுக்கு வருகிறது.
THANKS TO : http://tamil.forumta.net/-f31/-t263.htm
பெயரில்லா சொன்னது…
Valga Mooppanar's ! Velga Moopanar's!